திங்கள், 27 ஜூலை, 2015

திருவலஞ்சுழி திருமுறை பதிகம் 05

இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 72 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்டம் ஆடி வேடம் 
தொலையாத வென்றியார் நின்றியூரும் 
நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு
இலையார் படை கையில் ஏந்தி எங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மன்னினாரே.

பாடல் விளக்கம்‬:
அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி. அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும், நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி, இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி, எல்லா இடங்களிலும் நிறைந்து, இமையவரும், அருகிலிருந்து, உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாக விரும்பி மேற்கொண்டார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவலஞ்சுழி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக