வியாழன், 23 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : முதல் திருமுறை 110 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவுமானான்
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 02
தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறை புனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 03
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
உடைதலை இடுபலி கொண்டு உழல்வான்
இடைமருது இனிது உறை எம்இறையே.

பாடல் விளக்கம்‬:
மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 04
பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருது ஆகும்.


பாடல் எண் : 05
பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் துயரவன் துயர் அகற்றும்
கழலவன் கரியுரி போர்த்து உகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 06
நிறையவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழவன் புகழ நின்ற
மறையவன் மறிகடல் நஞ்சை உண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கையோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 07
நனிவளர் மதியொடு நாகம் வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொடு அமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறைமதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 08
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன் நெடுங்கை மா மதகரி அன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மதயானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 09
பெரியவன் பெண்ணினொடு ஆணுமானான்
வரியரவு அணை மறிகடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.


பாடல் எண் : 10
சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

பாடல் விளக்கம்‬:
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.


பாடல் எண் : 11
இலைமலி பொழில் இடைமருது இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும் வல்லார்
உலகுறு புகழினொடு ஓங்குவரே.

பாடல் விளக்கம்‬:
இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடை மருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதிவழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக