இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி
திருமுறை : ஆறாம் திருமுறை 17 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 01
ஆறுசடைக்கு அணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடையர் அம்பொன்தோள் மேல்
நீறு தடவந்து இடபம் ஏறி
நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்
கூறும் குணமுடையர் கோவணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து, உள்ளங்கையில் தீயினை ஏற்றவர். அழகர். படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது, நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர். தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர். கோவணம் ஒன்றே உடையவர். கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர். இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர்.
பாடல் எண் : 02
மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மட மானிடமுடையர் மாதராளைப்
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்குவடம் புனைவர் பாவநாசர்
சங்கு திரையுகளும் சாய்க்காடு ஆள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலி திரிவர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர். தேவருலகிற்கும் உரியவர். பார்வதியை இடப்பாகமாக உடையவர். மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர். பால்போன்ற திருநீற்றை அணிந்து, படிக மணிமாலை பூண்டு, அடியார் பாவங்களைப் போக்குபவர். சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர். பல அரிய செயல்களை உடையவர். எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர். என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர்.
பாடல் எண் : 03
ஆல நிழலிருப்பர் ஆகாயத்தர்
அருவரையின் உச்சியர் ஆணர் பெண்ணர்
காலம்பல கழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாம் காணாதார்க்கு
கோலம்பல உடையர் கொல்லை ஏற்றர்
கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர். ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர். காலங்களுக்கு அப்பாற் பட்டவர். நீலகண்டர். தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர். பல வேடங்களை உடையவர். முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர். கொடிய மழுப்படை ஏந்தியவர். கோழம்பம், ஏலக்காய் மணம் கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர்.
பாடல் எண் : 04
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும்
செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்
வாசம் மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவும் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும்
ஈசர் புனல் பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர், தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர். திருவாரூரில் என்றும் இருப்பவர். பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர். மான் தோலைப் போர்த்தியவர். யானைத் தோலையும் உடையவர். எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர். அடியார்களுக்கு அன்பர். தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர். கட்டங்கப் படையுடையவர். தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர். காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர்.
பாடல் எண் : 05
கரப்பர் கரியமனக் கள்வர்க்கு உள்ளம்
கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர்
தூய மறை மொழியார் தீயால் ஒட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர். உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர். கடல் விடத்தை உண்டவர். தூய வேதங்களை ஓதுபவர். அறிவில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர். நீண்ட சடை முடியர். விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர். எங்களை ஆள்பவர். என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர்.
பாடல் எண் : 06
கொடியார் இடபத்தர் கூத்தும் ஆடி
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோலமார்ந்த
பொடியாரும் மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்தணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியர் எவரும் போற்ற
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய், அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய், வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர்.
பாடல் எண் : 07
பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி ஆள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி இல்லம் தோறும்
பிச்சைக் கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்றும் உள்ளார்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங்கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய். மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி, அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர். கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர். கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர். ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர். விளங்குகின்ற சடைமுடியை உடையவர். தம்மை விரும்பும் அடியார்களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர்.
பாடல் எண் : 08
காவார் சடைமுடியர் காரோணத்தர்
கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலும் திருவுருவம் பாகம் மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்கும் தாமே
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார், சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும், கயிலாயத்திலும், தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய், இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார்.
பாடல் எண் : 09
புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில்
பிரிந்தார் அகல்வாய பேயும் தாமும்
பிரியார் ஒரு நாளும் பேணு காட்டில்
எரிந்தார் அனலுகப்பர் ஏழிலோசை
எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர். பூதங்களின் தலைவர். தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர். அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர். எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர்.
பாடல் எண் : 10
விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட்டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடியுள் உறைவர் மாகாளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை அன்று
செழுமுடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக்கு ஈந்தார் வென்றி
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
பாடல் விளக்கம்:
இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர். கடல் நஞ்சுண்டவர். அழகர். நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர். தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர். மழபாடியிலும் இரும்பை, அம்பர், உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர். பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக