புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 08

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும் 
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
திருமுடியின் மேல், பெருமை பொருந்திய பிறையும், பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர், குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும், "அந்தோ! இவன் நம் அடியவன்!" என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில், வாளா இருத்தல் தகுதியாகுமோ!.


பாடல் எண் : 02
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் 
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.


பாடல் எண் : 03
ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள் 
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் 
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய்; அதனால், அவ்விடம் கரிதாயினாய்; இவை உன் அருட்செயல்கள்.


பாடல் எண் : 04
சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர் 
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற, அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி, பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்பு செய்வேன்; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்; இஃது என் உணர்விருந்தவாறு.


பாடல் எண் : 05
ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்து அருளித் 
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் 
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மாமறுகின் 
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே.

பாடல் விளக்கம்‬:
நீர்ச் சுழிகளை, அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப்பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே, நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின். என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய்; பின் அது காரணமாக, என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய்; பின் அது காரணமாக, என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய்; உன்னை "இவ்வாறு செய்க" எனக் கட்டளையிடுவார் யார்?.


பாடல் எண் : 06
ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலி அதள்மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாறக் 
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவைபோக
பார்த்தானுக்கு இடமாம் பழியில் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல், ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே, யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக் கொண்டவனே, உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே.


பாடல் எண் : 07
பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள்
உரித்தாய் ஆனையின் தோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் 
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள்.


பாடல் எண் : 08
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக்
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும் படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்.


பாடல் எண் : 09
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே 
மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே.

பாடல் விளக்கம்‬:
பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான்.


பாடல் எண் : 10
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் 
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே.

பாடல் விளக்கம்‬:
பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக