புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 40 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் 
கண்ணுலாம் பொழில் சூழ் கழிப்பாலையெம் 
அண்ணலே அறிவான் இவள் தன்மையே.

பாடல் விளக்கம்‬:
கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச் சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல் கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.


பாடல் எண் : 02
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து 
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள்
பரிந்து உரைக்கிலும் என்சொல் பழிக்குமே.

பாடல் விளக்கம்‬:
தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.


பாடல் எண் : 03
மழலைதான் வரச்சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே.

பாடல் விளக்கம்‬:
குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; "அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்" என்கின்றாள்.


பாடல் எண் : 04
செய்ய மேனி வெண்ணீறு அணிவான் தனை 
மையலாகி மதிக்கிலள் ஆரையும்
கைகொள் வெண் மழுவன் கழிப்பாலையெம் 
ஐயனே அறிவான் இவள் தன்மையே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின் மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.


பாடல் எண் : 05
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய 
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று 
ஒருத்தியார் உளம் ஊசல தாடுமே.

பாடல் விளக்கம்‬:
ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற்சென்று கண்டிட வேண்டும் என்று ஊசலாடுகிறது.


பாடல் எண் : 06
கங்கையைச் சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடி திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.

பாடல் விளக்கம்‬:
இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலை மகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப் போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.


பாடல் எண் : 07
ஐயனே அழகே அனல் ஏந்திய 
கையனே கறை சேர்தரு கண்டனே
மையுலாம் பொழில் சூழ் கழிப்பாலையெம் 
ஐயனே விதியே அருள் என்னுமே.

பாடல் விளக்கம்‬:
இவள், "தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!" என்று கூறுகின்றாள்.


பாடல் எண் : 08
பத்தர்கட்கு அமுதாய பரத்தினை
முத்தனை முடிவு ஒன்றிலா மூர்த்தியை
அத்தனை அணியார் கழிப்பாலையெம் 
சித்தனை சென்று சேருமா செப்புமே.

பாடல் விளக்கம்‬:
இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக! என்கின்றாள்.


பாடல் எண் : 09
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 10
பொன்செய் மாமுடி வாள் அரக்கன் தலை
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் 
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் 
துஞ்சும் போதும் துணை எனல் ஆகுமே.

பாடல் விளக்கம்‬:
பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும் போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக