செவ்வாய், 7 ஜூலை, 2015

திருப்பரங்குன்றம் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : பரங்கிரிநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஆவுடைநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 02 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரமூர்த்திசுவாமிகள் முப்பெருவேந்தர்களோடும் மதுரை மாநகரில் திருவாலவாயுடையாரை வணங்கி, திருவாப்பனூர், திருவேடகம் முதலான பதிகளைப் பணிந்து மீண்டும் மதுரை மாநகரில் மகிழ்ந்திருக்கும் நாள்களில் பார்த்திபரோடும் திருப்பரங்குன்றில் பரமரைப் பணிந்து அவர்கள் முன்னே பாடியருளியது இத் திருப்பதிகம்

இத் திருப்பதிகம், இறைவற்குப் பணிசெய்தற்கு, இறைவற்கும் உயிர்கட்கும் உள்ள பெருமை சிறுமைகளை உணர்த்துதற் பொருட்டு, இறைவனை உள்ளுறைச் சிறப்பு வகையால் (பழிப்பது போலப் புகழ்தல் வகையால்) பாடியருளியது.


பாடல் எண் : 01
கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர் உம்மைக் கொண்டு உழல்கின்றதோர் கொல்லைச்சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியும் சிலபூதமும் நீரும் திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து
ஆர்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவரே, நீர், பெரிய மலையையும், சுரத்தையும் கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர் எருது மண் மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும், அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும், "சோத்தம்" எனச் சொல்லி வணங்குமாறு, நீர் அரையிற் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி, அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு; அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 02
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழுநீறு மெய் பூசுதிர் மூக்கப் பாம்பைக் 
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலைக் கடைந்திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருத்தும்
அண்டம் கடந்து அப்புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவரே, அடியோங்கள் "பெரியாரொடு நட்டல் இன்பந் தருவது" என்று கருதியிருப்பேமே ஆயினும், நீர் தலை மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இவ்வண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்து கொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லேம் அல்லேம் ஆதலின், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 03
மூடாய முயலகன் மூக்கப்பாம்பு முடைநாறிய வெண்தலை மொய்த்த பல் பேய்
பாடாவரு பூதங்கள் பாய் புலித்தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் 
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்கும் துணை மாமணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று 
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
எம்பெருமானிரே, இறைவரே, உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடை நாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித் திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை, தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை, இதழ் நிறைந்த கொன்றை மலரும், எருக்கம்பூவுமாம். இவற்றோடு அரையில், பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக் கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர்; அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 04
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு 
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், பெருத்த ஊற்றினிமை பொருந்திய தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். நீர் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருஞான்றும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 05
பொல்லாப் புறங்காட்டு அகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர்க் கரக்கோயிலில் முன் கண்டதும்
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
எம்பெருமானிரே, இறைவரே, நீர், பொல்லாங் குடை மயானத்தில் ஆடுதலைத் தவிரீர்; அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; "எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலிரே" என்று, உம் அடியவனாகிய யான், இரவும் பகலும் கவல்வேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியக் கோலமாகக் கண்டதும், மற்றொருநாள் கடம்பூர்க் கரக்கோயிலில் இலிங்க மூர்த்தியாகக் கண்டதும் தவிர, பிறிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதிலம் அதனால், அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 06
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர் படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்
பண்ணார் மொழியாளை ஓர் பங்கு உடையீர் படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவரே, "தென்னாத்தெனாத் தெத்தெனா" என்று பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர், பலவாகிய நான்கு வகைப் பட்ட வேதங்களைப் பாடுவீர்; திருப்பாசூரில் இருக்கின்றீர் எனினும், "படம் பக்கம்" என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண் போலும் மொழியினையுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர் ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். "அண்ணாமலை யிடத்தேன்" என்றீர் ஆயினும், ஆரூரில் இருக்கின்றீர் அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 07
சிங்கத்துரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர்
பங்கம் பல பேசிடப் பாடும் தொண்டர் தமைப் பற்றிக் கொண்டு ஆண்டு விடவும் கில்லீர்
கங்கைச் சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால்
அங்கத்துறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
கங்கையை உடைய சடையை உடையவரே, இறைவரே, நீர், வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர் ஆயினும், தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர் ஆயினும், "இவர் சிலரை ஒட்டி அடிமைகொள்ளல் எற்றிற்கு" என உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு, பாடவல்ல, தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு, அவர்களை விடவும் மாட்டீர் அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்களோ மூன்றுடையீர் ஆயினும், நாங்கள் உம் எதிர் நின்று அகலாதிருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர் ஆகலின், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 08
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர் பெருங்காட்டு அகத்தில் பெரும் பேயும் நீரும் 
துணி வண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய்
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
எம்பெருமானிரே, இறைவரே, நீர், பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலியவினையை நீக்கி அருள் பண்ணுகின்றிலீர்; அன்றியும், பெரிய காட்டிடத்திற் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேற் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக் கொண்டு, நீல மணிபோலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தையுடையவராய், அதன் மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எவ்வாற்றானும் அழகிய வடிவத்தை உடையவராகியே நிற்றலால் அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 09
கோளாளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில் கொள்ளீர்
வேளாளிய காமனை வெந்தழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் 
தோளான் உமை நங்கையொர் பங்குடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்
ஆள் ஆளியவே கிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
எம்பெருமானிரே, இறைவரே, நீர், கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர்; மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ளமாட்டீர்; வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்து அழியுமாறு அழித்தீர்; அதற்கு மாறாயும், மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு, உடுக்கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆளமாட்டீர்; அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால், அடியேங்கள். உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 10
பாரோடு விண்ணும் பகலுமாகிப் பனி மால்வரையாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடுங் காற்றுயாகி நெடு வெள்ளிடையாகி நிலனுயாகி 
தேரோட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கையெல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

பாடல் விளக்கம்‬:
இறைவரே, மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும், மலை ஆகியும், கடல் ஆகியும், எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும், எல்லையற்ற வெளி ஆகியும். நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர். இனி, தனது ஊர்தி தடை யின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம், யார் செய்கையோடும் ஒவ்வா; இஃது என்! இவற்றால் அடி யோங்கள் உமக்குப் பணிசெய்ய அஞ்சுவேம்.


பாடல் எண் : 11
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறுமோர் நான்குமோர் ஒன்றினையும் 
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே 
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே.

பாடல் விளக்கம்‬:
தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங்கொண்டு, நம்பி ஆரூரன், முடியொடு நின்று உலகத்தை ஆள்கின்ற மூவேந்தர் முன்னிலையில், "அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்" என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணர வல்ல அடியார்கள், திருப்பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நிழலிலே வாழ்கின்றவராய், அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கொத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருப்பரங்குன்றம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக