சனி, 11 ஜூலை, 2015

திருச்சாய்க்காடு திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 41 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
மண் புகார் வான்புகுவர் மனம் இளையார் பசியாலும் 
கண் புகார் பிணியறியார் கற்றாரும் கேட்டாரும் 
விண் புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித் 
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

பாடல் விளக்கம்‬:
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.


பாடல் எண் : 02
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.

பாடல் விளக்கம்‬:
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக் கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.


பாடல் எண் : 03
நீ நாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே 
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே.

பாடல் விளக்கம்‬:
நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர் வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.


பாடல் எண் : 04
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் 
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே.

பாடல் விளக்கம்‬:
பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழை மலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப் பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்ட விழ்க்கப்பட்ட மலர்களைத் தூவிக் கைகூப்பி வணங்குமின்.


பாடல் எண் : 05
கோங்கன்ன குவிமுலையாள் கொழும் பணைத்தோள் கொடியிடையைப் 
பாங்கென்ன வைத்து உகந்தான் படர்சடைமேல் பால்மதியம் 
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் 
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே.

பாடல் விளக்கம்‬:
கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச் சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.


பாடல் எண் : 06
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் 
தீந்தாகம் எரி கொளுவச் செற்று உகந்தான் திருமுடிமேல் 
ஓய்ந்தார மதிசூடி ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்தாகம் பாகமா உடையானும் விடையானே.

பாடல் விளக்கம்‬:
சந்தனம் போலத் திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளி திகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.


பாடல் எண் : 07
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி
சங்கெலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டு இன்னிசை பாடு மலர்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்லவே.

பாடல் விளக்கம்‬:
மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகிய மாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ண வந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.


பாடல் எண் : 08
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரியுண்ண 
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் 
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான் சாய்க்காட்டை 
இடவகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே.

பாடல் விளக்கம்‬:
தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக்கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.


பாடல் எண் : 09
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் 
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.

பாடல் விளக்கம்‬:
இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர் பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.


பாடல் எண் : 10
குறங்காட்டு நால்விரல் கோவணத்துக்கு உலோவிப் போய் 
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் 
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின் 
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக்கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.


பாடல் எண் : 11
நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங்காழிச் 
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் 
எம்பந்தம் எனக் கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே.

பாடல் விளக்கம்‬:
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக