திங்கள், 27 ஜூலை, 2015

திருவலஞ்சுழி திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 106 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.

பாடல் விளக்கம்‬:
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்?.


பாடல் எண் : 02
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம் 
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில் 
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி இடமாகக் 
கொண்ட நாதன் மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே.

பாடல் விளக்கம்‬:
கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர் களைக் காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும்.


பாடல் எண் : 03
திருந்தலார் புரம் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்துமாவன மந்திரமாவன வலஞ்சுழி இடமாக 
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணை அடித்தலம் தானே.

பாடல் விளக்கம்‬:
திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன.


பாடல் எண் : 04
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திறம் முனிவர்க்கு அன்று 
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிதருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அருங்கானத்து
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே.

பாடல் விளக்கம்‬:
நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளிய வரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தை யாம் இன்னதென அறியேம்.


பாடல் எண் : 05
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றலாம் எரியுரு ஒருபாகம் 
பெண்ணர் ஆண் எனத் தெரிவு அரு வடிவினர் பெருங்கடல் பவளம் போல் 
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க 
எண்ணர் ஆகிலும் எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே.

பாடல் விளக்கம்‬:
சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர். அவர்தம் இணையடி தொழுபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர்.


பாடல் எண் : 06
ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மடமாதர் 
இருவர் ஆதரிப்பார் பலபூதமும் பேய்களும் அடையாளம்
அருவராததோர் வெண்தலை கைப் பிடித்து அகம்தொறும் பலிக்கென்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே.

பாடல் விளக்கம்‬:
அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால் அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக் கவர்ந்தவர்.


பாடல் எண் : 07
குன்றியூர் குடமூக்கிடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்
என்று இவ்வூர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார்
அன்றியூர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்பால் 
சென்று அ(வ்) ஊர்தனில் தலைப்படலாமென்று சேயிழை தளர்வாமே.

பாடல் விளக்கம்‬:
அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல்லி வருபவர். இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம். பல ஊர்களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள்.


பாடல் எண் : 08
குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் நேரன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப் 
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.

பாடல் விளக்கம்‬:
குயில் மொழியும் கொடியிடையும் மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர் காணார்.


பாடல் எண் : 09
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரிது ஆயவர் மாண்பமர் தடக்கையில் 
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் 
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே.

பாடல் விளக்கம்‬:
நான்முகனும், திருமாலும் திருமுடியையும், திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார் தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர்.


பாடல் எண் : 10
அறிவிலாத வன்சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் 
நெறியலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர் 
மறியுலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் 
பிறிவிலாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப்பு ஒண்ணாதே.

பாடல் விளக்கம்‬:
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும்.


பாடல் எண் : 11
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை 
ஆதரித்து இசைகற்று வல்லார் சொலக்கேட்டு உகந்தவர் தம்மை 
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே.

பாடல் விளக்கம்‬:
மாதொரு கூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார் அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக