புதன், 29 ஜூலை, 2015

ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 2, திருநாவுக்கரசர் - 5, சுந்தரர் - 1


இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.


3 நிலை ராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராத மூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. 


நடராச சபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின் போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.


இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். இவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும். இத்தலம் பைரவர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.


கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.


சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக