வெள்ளி, 10 ஜூலை, 2015

திருச்சாய்க்காடு திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : குயிலினும் நன்மொழியம்மை

திருமுறை : இரண்டாம் திருமுறை 38 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தல வரலாறு : சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் தாவரம் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். 

சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கிலும், தெற்கிலும் முகப்பு வாயில்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே ஆலயத்தின் 3 நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்திற்கு வெளியே இடதுபுறம் ஐராவத தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். 

வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலது புறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சந்நிதியும் உள்ளன. மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே தெற்கு நோக்கிய இறைவியின் குயிலினும் நன்மொழியம்மை சந்நிதியும் உள்ளது.

வில்லேந்திய முருகர்: அம்பாள் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வலது புறம் இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தருகிறார். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம், ஒரு கரத்தில் அம்பு, ஒரு கரத்தில் வில், மற்றெரு கரத்தில் கொடி ஆகியவற்றுடன் அருட்காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி அளிக்கிறார். காலில் சிவபெருமான் கொடுத்த வீரகண்டமனியை அணிந்திருக்கிறார். சிக்கலில் அம்பாள் எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று சிவபெருமான் கொடுத்த இந்த வீரகண்டமனியும் எதிரிகளை அழிக்க பயன்பட்டது. இவரும் தெற்கு நோக்கியே காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் கோவிலைச் சார்ந்த இத்திருவுருவினை வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்ல முயன்ற கோது, கடலில் புயலில் கப்பல் சிக்கவே இத்திருவுருவினை காவிரிப்பூம்பட்டிணக் கரையில் போட்டுச் சென்றதாகவும் அதனைக் கண்டெடுத்து இந்த திருக்கோவிலில் வைத்துள்ளதாகவும் கூறுவர்.

இயற்பகை நாயனார்: 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலம் இதுவாகும். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் "நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் சிவனடியார்களுக்கு அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை" என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். 


அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவனையும் எல்லாம் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி, "நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க" எனக்கூறி மறைந்தார். இறந்த உறவினர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தார்.

தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. 

இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார். ஐராவதம் கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் உண்டான இடத்திலுள்ள தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தம்.

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம்.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

பாடல் எண் : 01
நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவி
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் 
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மத யானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித் தவழ்ந்து வரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ள திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 02
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
வெண்தலைக் கருங்காடு உறை வேதியன் கோயில் 
கொண்டலைத் திகழ் பேரி முழங்க குலாவித் 
தண்டலைத் தடம் மாமயிலாடு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவி ஆடும் திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 03
நாறு கூவிளம் நாகிள வெண்மதியத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான் உறை கோயில் 
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண் கதலிப் புதல் மேவு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
மணம் வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர் தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப் புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 04
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார் 
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் 
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்கம் நீள்கழித் தண்கரை வைகு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணை எய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டு வந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 05
ஏழைமார் கடைதோறும் இடு பலிக்கு என்று
கூழை வாளரவு ஆட்டும் பிரானுறை கோயில் 
மாழை ஒண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந் 
தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 06
துங்க வானவர் சூழ் கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் 
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் 
சங்கும் வாரி தடங்கடல் உந்து சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத் தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 07
வேத நாவினர் வெண்பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்து உறை கோயில் 
மாதர் வண்டு தன் காதல் வண்டாடிய புன்னைத் 
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னை மலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்.


பாடல் எண் : 08
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த 
அரக்கன் ஆகம் நெரித்து அருள் செய்தவன் கோயில் 
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் 
தருக் குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
தான் வீற்றிருக்கும் நீண்ட கயிலை மலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக் கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும்.


பாடல் எண் : 09
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த 
வேலையா விடம் உண்டவர் மேவிய கோயில் 
சேலினேர் விழியார் மயிலாலச் செருந்தி 
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்ற கண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 10
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும் 
ஆத்தமாக அறிவு அரிதாயவன் கோயில் 
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே.

பாடல் விளக்கம்‬:
அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்.


பாடல் எண் : 11
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும் 
ஊனமின்றி உரைசெய வல்லவர் தாம் போய்
வானநாடு இனிது ஆள்வர் இம் மாநிலத்தோரே.

பாடல் விளக்கம்‬:
சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர் புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்ற வகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

3 கருத்துகள்:

  1. நல்ல இணைய தளம்.
    வாழ்த்துகள். ! மென் மேலும் தொடர்க

    ஆரூரன் அடிமை முரு. சுவாமிநாதன்
    14-மார்ச்-2016

    பதிலளிநீக்கு
  2. தென்னாடுடைய சிவனே போற்றி..!

    பதிலளிநீக்கு
  3. தென்னாடுடைய சிவனே போற்றி..!

    பதிலளிநீக்கு