திங்கள், 27 ஜூலை, 2015

திருவலஞ்சுழி திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்

இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, பிருகந்நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 106 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பள்ளம தாய படர் சடை மேல் பயிலும் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்து ஏத்தி
உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே.

பாடல் விளக்கம்‬:
பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான். அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள். உறுநோய் உங்களை அணுகாது. 


பாடல் எண் : 02
காரணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன்சடை தன்மேல்
தாரணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டு உகந்த உவகை அறியோமே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான், கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி, இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றை மாலையையும், குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர். கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். ஊர்கள் தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம்? அறிய இயலவில்லை.


பாடல் எண் : 03
பொன்னியலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின்னியலும் சடைதாழ வேழவுரி போர்த்து அரவாட
மன்னிய மாமறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வாம் பிணி போமே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர். மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். ஆடும் பாம்பை அணிந்தவர். நிலைபெற்ற, பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும்.


பாடல் எண் : 04
விடையொரு பாலொரு பால் விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால் சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடையாத செய்யும் செய்கை அறியோமே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச் சேர்ந்த மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம். விரிந்து பரந்த சடை ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒரு பக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒரு பக்கம். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம்.


பாடல் எண் : 05
கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி
மெய்யமரும் பொடிப் பூசி வீசும் குழையார் தருதோடும்
பையமரும் அரவாட ஆடும் படர் சடையார்க்கு இடமாம்
மையமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே. 

பாடல் விளக்கம்‬:
இறைவன் கையில் மழு, பாம்பு, வீணை, கலை மான் கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர். திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். ஒளியை வீசி அசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர். படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர். படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாற்புறமும் வேலிபோன்று, இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும்.


பாடல் எண் : 06
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம்
கண்டிடு பெய்பலி பேணி நாணார் கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே. 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர். யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து, நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக.


பாடல் எண் : 07
கல்லியலும் மலையம் கை நீங்க வளைத்து வளையாதார்
சொல்லியலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க
மல்லியலும் திரள்தோள் எம் ஆதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற திரிபுர அசுரர்களின், பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர்.


பாடல் எண் : 08
வெஞ்சின வாளரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சுலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மாநகரே.

பாடல் விளக்கம்‬:
கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 09
ஏடு இயல் நான்முகன் சீர் நெடுமால் என நின்றவர் காணார்
கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர் உலகேத்த
வாடிய வெண்தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே.

பாடல் விளக்கம்‬:
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் உலகோர் போற்றி வணங்குமாறு, வற்றிய பிரம கபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவளையாடல்கள் பலபலவாகும்.


பாடல் எண் : 10
குண்டரும் புத்தரும் கூறையின்றிக் குழுவார் உரை நீத்து
தொண்டரும் தன்தொழில் பேண நின்ற கழலான் அழலாடி
வண்டமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழி வாணன் எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.

பாடல் விளக்கம்‬:
தீவினைக்கஞ்சாத சமணர்கள், ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள். அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளி விடுங்கள். தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க. கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன். வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும், காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக. (நீவிர் அவனை நினைந்து வழிபட்டு உய்மின் என்பது குறிப்பு). 


பாடல் எண் : 11
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழி இவ்வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழியொரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வாமே. 

பாடல் விளக்கம்‬:
எம் தலைவனும், தந்தையுமான, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத்தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும் நனி விளங்கும் உயர்ந்த புகழடைவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக