செவ்வாய், 14 ஜூலை, 2015

திருவாஞ்சியம் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாஞ்சியநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 67 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம் 
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

பாடல் விளக்கம்‬:
படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.


பாடல் எண் : 02
பறப்பையும் பசுவும் படுத்துப் பல
திறத்தவும் உடையோர் திகழும் பதி
கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு 
சிறப்புடை திருவாஞ்சியம் சேர்மினே.

பாடல் விளக்கம்‬:
பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக் கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.


பாடல் எண் : 03
புற்றில் ஆடரவோடு புனல் மதி 
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ் திருவாஞ்சியம் 
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப் பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.


பாடல் எண் : 04
அங்கம் ஆறும் அருமறை நான்குடன் 
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
செங்கண் மாலிடமார் திருவாஞ்சியம் 
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

பாடல் விளக்கம்‬:
நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும் நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார்.


பாடல் எண் : 05
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை 
ஆறு சூடும் அடிகள் உறை பதி 
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் 
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

பாடல் விளக்கம்‬:
திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல்வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும்.


பாடல் எண் : 06
அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு 
உற்ற நற்றுணை ஆவான் உறை பதி
தெற்று மாடங்கள் சூழ் திருவாஞ்சியம் 
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்தாவதே.

பாடல் விளக்கம்‬:
பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.


இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின


பாடல் எண் : 10
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் 
திருத்தும் சேவடியான் திகழும் நகர் 
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் 
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே.

பாடல் விளக்கம்‬:
சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக