புதன், 29 ஜூலை, 2015

திருக்கழிப்பாலை திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

திருமுறை : நான்காம் திருமுறை 06 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் பிரான் அருகில் இருந்த வேட்களம், கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார். 

சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் நிலை கண்டு அவளது அன்னை கூறும் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தனது தலைவன் தன்னுடன் வந்து இணையாததால் மனவருத்தம் அடையும் அப்பர் நாயகி, உடல் மெலிகின்றாள். இதனைக் கண்ட அவளது அன்னை, தனது மகளின் உடல் மெலிவுக்குக் காரணம் ஆய்ந்து அறியும் பொருட்டு, மகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கின்றாள். தனது மகள் எப்போதும் சிவபிரானின் நினைவாகவே, அவனது உருவ அடையாளங்களைச் சொல்லி பிதற்றுவதை உணர்ந்த தாய், அந்த அடையாளங்களைக் கொண்டு தனது மகள், கழிப்பாலையில் உறையும் சிவபிரானைக் கண்டு காதல் கொண்டுள்ளாள் என்ற முடிவுக்கு வருகின்றாள். இதனை விவரிக்கும் விதமாக, அனைத்துப் பாடல்களும் அமைந்து ஒரு அகத்துறைப் பதிகமாக அமைந்துள்ளது.


பாடல் எண் : 01
வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சினபவள திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்
அனபவள மேகலையொடு அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்
கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
எனது மகள், தனது பவளம் போன்று அழகிய உதடுகளைக் கொண்ட வாயினால் சொல்லும் சொற்களை நான் கூறுகிறேன்: நீங்கள் கேட்பீர்களாக, தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாக விளங்குபவன் என்றும், சினம் கொள்ளும் சமயத்தில் சிவந்து பவளம் போன்று காட்சி அளிக்கும் திண்ணிய தோள்களின் மேல் சேர்ந்து விளங்கும் வெண்மையான திருநீறு அணிந்தவனே என்றும், அன்னம் போன்ற நடையினையும் பவளங்களின் நிறம் கொண்ட மேகலையை உடையாக அணிந்த உமையம்மையுடன் அண்டங்களையும் கடந்த இடத்தில் உறைபவனே என்றும், எனது மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டே இருக்கின்றாள். பெரிய அளவிலான பவளங்களைக் கரையில் கடல் சேர்க்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 02
வண்டுலவு கொன்றை வளர் புன்சடையானே என்கின்றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாண்மலர் உண்டு என்கின்றாளால்
உண்டயலே தோன்றுவதொரு உத்தரியப் பட்டுடையன் என்கின்றாளால்
கண்டயலே தோன்றும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
வண்டுகள் சூழ்ந்திருக்கும் கொன்றை மலர்களை அணிந்து செம்பட்டை நிறத்தில் பொன் போன்று காணப்படும் சடையை உடையவனே என்றும், இதழ்கள் விரிந்து நறுமணம் வீசும் புதியதாக அன்று பூத்த வெள்ளெருக்க மலர்கள் அந்த சடையில் உள்ளன என்றும், சிவபிரானது தோள் மேல் உத்தரியமாக பட்டாடை உள்ளது என்றும் பிதற்றிக் கொண்டு இருக்கும் எனது மகள், கடற்கரையில் நீர்முள்ளிகள் காணப்படும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, கண்டாள் போலும்.


பாடல் எண் : 03
பிறந்திளைய திங்கள் எம்பெம்மான் முடி மேலது என்கின்றாளால்
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்
மறங்கிளர் வேற்கண்ணாள் மணிசேர் மிடற்றவனே என்கின்றாளால்
கறங்கோதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
எம்பெருமானது முடியின் மேல் உள்ளது இளைய திங்கள் என்றும், எம்பெருமானின் மேனி நிறம் குங்குமத்தின் நிறத்தை ஒத்தது என்றும், வீரத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய பார்வதி தேவியை உடலில் கொண்டவனே என்றும், நீல மணியின் நிறத்தை கழுத்தில் உடையவனே என்றும் என் மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டு இருக்கின்றாள். சுழன்று சுழன்று அடித்து இடைவிடாது ஓசை எழுப்பும் அலைகள் மலிந்த கடலின் அருகில் உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 04
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியொர் வெண்மழுவன் என்கின்றாளால்
சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும், வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே என்றும், திருநீற்றை அணிந்தவனே என்றும், தாருகவனத்து பெண்களின் மனதினை கொள்ளை கொண்ட இளமையான தோற்றத்தை உடையவனே என்றும், பின்னப்பட்ட சடையுடனும் தோன்றியவனே என்றும், என் மகள் ஓயாது கூவிக் கொண்டே இருக்கின்றாள். அவள் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை கண்டாள் போலும்.


பாடல் எண் : 05
பழியிலான் புகழுடையான் பால் நீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்
விழியுலாம் பெரும் தடங்கண் இரண்டல்ல மூன்றளவே என்கின்றாளால்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும், பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவன் என்றும், எருதினை வாகனமாகக் கொண்டவன் என்றும், மற்றவர்கள் போல் இரண்டு விழிகள் அல்லாமல், நீண்டு அகன்ற மூன்று விழிகளைக் கொண்டவன் என்றும், நீர்ச் சுழிகளுடன் பரந்து மிகவும் வேகமாக இறங்கி வந்த கங்கை நீற்றினை சடையில் தரித்தவனே என்றும் எப்போதும் சிவபெருமானின் அடையாளங்களையே சொல்லிக் கொண்டு இருக்கின்றாள். உப்பங்கழிகள் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, அவள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 06
பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
பண்கள் நிறைந்த ஒலியினை எழுப்பும் வீணையைப் பயிலும் விரல்களை உடையவனே என்றும், நல்ல வாழ்க்கை முறைகளை மறந்து அனைவருக்கும் தொல்லை கொடுத்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரது பறக்கும் கோட்டையினை எரித்தவனே என்றும், பண்களுக்கு ஏற்ப முழவு எனப்படும் தோற்கருவி வாத்தியம் இயங்க, பாடிக்கொண்டே கூத்தை நிகழ்த்தும் திறமை உடையவனே என்றும் எனது மகள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். கண்களுக்கு நிறைவைத் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 07
முதிரும் சடைமுடி மேல் மூழ்கும் இளநாகம் என்கின்றாளால்
அது கண்டு அதனருகே தோன்றும் இளமதியம் என்கின்றாளால்
சதுர் வெண்பளிங்குக் குழைக் காதில் மின்னுடுமே என்கின்றாளால்
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
முதிர்ந்த சடை முடியில் இளநாகம் மூழ்கி விட்டதால் புலப்படவில்லை என்றும், நாகம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால் அச்சம் ஏதும் இன்றி சடையில் சந்திரன் இருக்கின்றது என்றும், வேலைப்பாடு மிகுந்த பளிங்கு போன்று வெண்மையான குழை காதில் மின்னுகின்றது என்றும் என் மகள் வாயிலிருந்து சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் கடல் அலைகள் மிகுந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 08
ஓரோதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீரோதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பாரோத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
காரோதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
ஓர்ந்து கொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும், கடல் போன்று பரந்த கங்கை நதியை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த சடையினை உடையவனே என்றும், பொன் போன்று மிளிரும் சடையை உடையவனே என்றும், உலகினை நான்கு புறங்களிலும் சூழ்ந்து காணப்படும் கடலில் விளையும் பவளத்தின் நிறத்தை உடையவனே என்றும் எனது மகள் ஓயாது சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். கருமை நிறம் கொண்ட கடலின் அருகே உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 09
வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே என்கின்றாளால்
ஊனுலாம் வெண்தலை கொண்டு ஊரூர் பலி திரிவான் என்கின்றாளால்
தேனுலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும், உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும் புலால் நாற்றம் வீசும் பிரம கபாலத்தை ஏந்தி பலி ஏற்பதற்காக உலகெல்லாம் திரிந்தவனே என்றும், தேன் உண்ணும் வண்டினங்கள் சூழ்ந்த கொன்றைப் பூக்கள் சிறப்புடன் விளங்கும் மார்பினை உடையவனே என்றும், எனது மகள் பிதற்றிக்கொண்டு இருக்கின்றாள். காடுகள் சூழ்ந்து நீர்வளம் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.


பாடல் எண் : 10
அடர்ப்பரிய இராவணனை அருவரைக் கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
மடற்பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பாடல் விளக்கம்‬:
எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் இடுக்குண்டு நசுங்கும் நிலைக்குத் தள்ளியவனே என்றும், சுடர் விட்டு பிரகாசிக்கும் பெரிய திருமேனியைக் கொண்டவனே என்றும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனே என்றும், பெரிய இலைகளைக் கொண்ட கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே என்றும் எனது மகள் இடைவிடாது மொழிகின்றாள். கடலின் பகுதியாகிய உப்பங்கழிகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

தனது மகள் இடைவிடாது கூறிய சொற்களைக் கேட்ட தாய், தனது மகள் சிவபிரான் பேரில் தீராத காதல் கொண்டிருப்பதை உணர்கின்றாள். அறியா வயது சிறுமி என்பதால், தனது மகளுக்கு, தான் கொண்டுள்ள காதல் நிறைவேறுமா அல்லவா என்பது புரியாத நிலையில், பித்துப் பிடித்தவள் போல் எப்போதும் சிவபிரானின் பெருமையையும் அவனது புகழ்ச் செயல்களையும், அவனது அடையாளங்களையும் பிதற்றிக் கொண்டு இருக்கும் மகளின் நிலையை எண்ணி, அவள் மீது இரக்கம் கொண்டு, தனது மகள் பற்றித் தான் கொண்டுள்ள கவலையை உணர்த்தும் அருமையான பாடல்கள் கொண்ட பதிகம்.

அகத்துறைப் பாடலாக சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள ஒரு பெண்ணின் செய்கைகளைச் சித்தரிக்கும் பதிகமாக இருந்தாலும், இந்த பதிகத்தின் மீது நமக்கு உணர்த்தப் படும் கருத்து யாதெனின், இவ்வாறு சிவபிரானின் நாமத்தையும் புகழினையும் இடைவிடாது சொல்லிக் கொண்டு இருந்தால், நமக்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்பதாகும். நாம் சிவபிரானின் திருநாமத்தை இடைவிடாது பிதற்றிக் கொண்டு, கண்களிலிருந்து நீர் பொழியுமாறு, அவனை வாயால் வாழ்த்தி, மனத்தினால் நினைத்து, பல காலமும் அவனது உருவத்தைத் தியானிக்க வேண்டும் என்று கூறும் மணிவாசகரின் பாடல் நமக்கு நினைவுக்கு வருகின்றது (கோயில் திருப்பதிகம், கடைப் பாடல்)

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் என். வெங்கடேஸ்வரன்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக