வியாழன், 23 ஜூலை, 2015

திருவிடைமருதூர் திருமுறை பதிகம் 06

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, ஸ்ரீ நன்முலைநாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை 56 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பொங்கு நூல் மார்பினீர் பூதப்படையினீர் பூங்கங்கை
தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்குமெழிலார் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில்
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பாடல் விளக்கம்‬:
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்த மார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.


பாடல் எண் : 02
நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பாடல் விளக்கம்‬:
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க்கருவியாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.


பாடல் எண் : 03
அழல்மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
எழில்மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பாடல் விளக்கம்‬:
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.


பாடல் எண் : 04
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்
வில்லால் புரமூன்றும் எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பாடல் விளக்கம்‬:
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 05
வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

பாடல் விளக்கம்‬:
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 06
சலமல்கு செஞ்சடையீர் சாந்தம் நீறு பூசினீர்
வலமல்கு வெண்மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர்
இலமல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பாடல் விளக்கம்‬:
பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 07
புனமல்கு கொன்றையீர் புலியினதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோர் ஏத்தும் சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பாடல் விளக்கம்‬:
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள்விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 08
சிலையுய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர் திறலரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

பாடல் விளக்கம்‬:
மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத் தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 09
மறைமல்கு நான்முகனும் மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர்
அறைமல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

பாடல் விளக்கம்‬:
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 10
சின்போர்வைச் சாக்கியரும் மாசு சேரும் சமணரும்
துன்பாய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள் ஏத்துமேர் கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

பாடல் விளக்கம்‬:
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித் தூற்ற இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்புவடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 11
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
கல்லால் இயன்ற அழகிய மாட வீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக